Last Updated:
கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் 150 பேர் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையை புரட்டி போட்ட கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் 150 பேர் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பதுளை உள்ளிட்ட பகுதிகளில் அதி மிக கனமழை கொட்டிய நிலையில், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காட்சியளிக்கிறது. மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, துபாயில் இருந்து இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ஆம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்தனர்.
புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கொழும்பு விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக கொழும்புவிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பேர் தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்காமல் அவதிக்குள்ளான பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் இந்திய ரூபாயும் குவைத் பணமும் மட்டுமே இருந்ததால் உணவு கூட வாங்கமுடியாமல் தவிப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொழும்புவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு பொதுத்துறை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.
November 29, 2025 11:46 AM IST


