Last Updated:
இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 160 பேர் உயிரிழப்பு, 8 லட்சம் பேர் பாதிப்பு. அனுர குமார திஸ்ஸநாயக்க அவசரநிலை பிரகடனம், இந்தியா உதவி வழங்கியது.
இலங்கையில் வரலாறு காணாத கனமழையால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நாட்டில் அவசரநிலையை அதிபர் அனுர குமார திசநாயக்கே பிரகடனப்படுத்தி உள்ளார்.
டிட்வா புயல் மற்றும் பருவமழை காரணமாக இலங்கை தத்தளித்து வருகிறது. திரிகோணமலை, வவுனியா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பதுலா, நுவரெலியா, மட்டக்களப்பு, மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏறத்தாழ 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். கிரிபவா, ராஜங்கனயா பகுதிகளில் கனமழையால் ரயில்வே பாலம் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
அனுராதபுரா, அதுருகிரியா உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்து தனித் தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின் மற்றும் இணையதள சேவைகளை பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா நேசக்கரம் நீட்டியுள்ளது. சாகர் பந்து திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க் கப்பல்கள் மீட்பு பணிகளில் உதவி வருகின்றன.
வரலாறு காணாத கனமழை மற்றும் பேரிடரால் இலங்கையில் அவசரநிலையை அதிபர் அனுர குமார திஸ்ஸநாயக்க பிரகடனப்படுத்தி உள்ளார். புயல் பாதிப்புகளை சீரமைக்க இந்திய மதிப்பில் ஏறத்தாழ 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதிபர் அனுர குமார திஸ்ஸநாயக்க ஒதுக்கியுள்ளார்.
November 30, 2025 9:37 AM IST


