கொழும்பு :
இலங்கையில் புதன்கிழமை (அக்டோபர் 22) எதிர்க்கட்சி அரசியல்வாதியான லசந்த விக்ரமசேகர (வயது 38) சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடலோர நகரமான வெலிகமவில் ஆட்சிமன்றத் தலைவராக பணியாற்றி வந்த அவர், தனது தொகுதி மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவன் பலமுறை சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றவாளி துப்பாக்கிக்காரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், அவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. எனினும், விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
தலசந்த, சமாகி ஜன பலவேகயா (SJB) கட்சியைச் சேர்ந்தவர். ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஆட்சிமன்ற அதிகாரப் போட்டி நிலவி வந்ததாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இவருக்கும் பாதாள உலக கும்பலுக்கும் தொடர்புள்ளதாகவும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டு (2025) இலங்கையில் வன்முறை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலானவை போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்புடையவையாகும். அதிகாரப்பூர்வ தகவல்படி, இதுவரை சுமார் 100 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகி, அதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து, ஒரு அரசியல்வாதி படுகொலை செய்யப்படும் இது முதலாவது சம்பவமாகும்.
சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க உறுதியளித்திருந்த அதிபர் திசாநாயக்க, இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.




