இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தனது சொந்த கருத்தையே வெளிப்படுத்தியுள்ளார், என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் சமூகத் தொடர்புகளுக்கான ஆயர் ஆணைக்குழுவின் தலைவரும், ஆயருமான ஜூட் நிஷாந்த சில்வா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரான போர் அல்ல
இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை எப்போதும் நல்லிணக்கம், சமூக உரையாடல் மற்றும் இலங்கையின் அனைத்து சமூகங்களையும் மதித்தல் ஆகியவற்றுக்காக நின்றது; தொடர்ந்தும் நிற்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நடந்த போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரே தவிர, எந்தவொரு இனக்குழுவிற்கும் எதிரான போர் அல்ல என்று கத்தோலிக்க திருச்சபையின், தேசிய சமூகத் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டியிருந்தது
“தலதா மாளிகை, அரந்தலாவவில் பிக்குகள், மத்திய வங்கி, கோட்டை பேருந்து நிலையம் மற்றும் தெஹிவளையில் தொடருந்து ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டியிருந்தது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டதே, இந்த 30 ஆண்டு காலப் போர் என்று அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துகள், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஆயர்கள் பேரவை என்பன இதனைத் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

