
இலங்கையை அண்மித்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் சென்றாலும், பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் படிப்படியாக விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (23) மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பின்னர் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

