அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&P) சர்வதேச தரநிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையின் கடன் மதிப்பீட்டை அரசாங்கம் ஸ்திரமான நிலையில் பேணுவதில் வெற்றி கண்டுள்ளதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த மதிப்பீடு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், டிட்வா சூறாவளி தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் போன்ற பல்வேறு வெளிப்புற சவால்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் பின்பற்றிய சரியான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக இந்த முன்னேற்றம் சாத்தியமானதாகக் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் ‘பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை’ (Transfer and Convertibility – T&C) மதிப்பீட்டிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில் மிகுந்த ஆபத்து நிறைந்த ‘CCC’ தரத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் ‘CCC+’ தரத்துக்கும், தற்போது 2026ஆம் ஆண்டில் ‘B-‘ தரத்துக்கும் உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இறக்குமதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமலும், பொருளாதார நடவடிக்கைகளைச் சுருக்காமலும், இலங்கை மத்திய வங்கியின் மூலோபாய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) தொடர்பில் இலங்கை சர்வதேச அளவில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதாரச் செயல்திறன் குறித்து மேலும் விளக்கமளித்த அவர், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், ஜூலை மாதத்துக்குள் ஆண்டிற்கான வருவாய் இலக்கில் 63.5 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் கூறினார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடையும் என பரப்பப்பட்ட தகவல்கள் உண்மையற்றவை என்பதை இந்த புதிய S&P மதிப்பீடு வெளிப்படுத்தியுள்ளதாகவும், சரியான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நிதி ஒழுக்கத்தின் மூலம் எதிர்கால பொருளாதாரச் சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் எனவும் அனில் ஜயந்த பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார்.

