கோத்தா பாரு:
தாய்லாந்திலிருந்து ஐந்து வகையான இறால் இனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி (IPs) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய மலேசிய மீன்வளத்துறைக்கு (DOF) குறைந்தது 30 நாட்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய மீன்வளத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ அட்னான் ஹுசைன் இதுகுறித்துக் கூறுகையில், தாய்லாந்து அரசு வழங்கிய தகவல்கள் முழுமையாக இருக்கும் பட்சத்தில், அமைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பக் குழு இந்த ஆவணங்களை இரண்டாம் கட்டமாக விரிவாக ஆராயும் என்றார்.
தாய்லாந்தின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னதாக, அடுத்த வாரம் மலேசிய தொழில்நுட்பக் குழு கூடி இந்த ஆவணங்களை பரிசீலிக்கவுள்ளது என்றும், மலேசியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் இறால்கள், உள்ளூர் மீன்வளர்ப்புத் தொழிலைப் பாதிக்கக்கூடிய நோய்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே கடந்த ஜூன் 1 முதல் இந்தத் தடை அமலில் உள்ளது என்றார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து வளர்ப்பு இறால்களைத் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு அனுமதிப்பதில்லை. இதனால், மலேசியாவும் தனது உயிர்-பாதுகாப்புத் தரநிலைகளை (Biosecurity standards) பலப்படுத்தி, தாய்லாந்து சந்தை விதிகளுக்கு ஏற்ப உள்ளூர் இறால் உற்பத்தியை மேம்படுத்தி வருகிறது.
கடந்த மே 16 அன்று, மலேசிய விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (MAFS) தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சீபாஸ்’ (Seabass) மீன்களுக்கு பகுப்பாய்வு சான்றிதழை (CoA) கட்டாயமாக்கியதுடன், ஜூன் 1 முதல் ஐந்து வகையான இறால்களுக்கு தற்காலிகத் தடையும் விதித்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்து சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ பதில்கள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இத்தடை நீக்கப்படும்.



