மத்திய பிரதேச மாநிலம் மந்த்சவுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லலிதா பாய். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2023 ஆண்டு திடீரென மாயமானார். அவரைக் காணவில்லை என குடும்பத்தினர் காந்தி சாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அடுத்த சில நாட்களில் லாரியில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலை நசுங்கி உயிரிழந்த அந்தப் பெண்ணை, டாட்டு மற்றும் காலில் கட்டியிருந்த கருப்பு கயிறு மூலம் அவரது உறவினர்கள் லலிதா பாய் தான் என்று, அடையாளம் கண்டு உறுதி செய்தனர்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இம்ரான், ஷாருக், சோனு, இஜாஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒன்றரை ஆண்டு கடந்தோடிய நிலையில், உயிரிழந்ததாக நினைத்த லலிதா பாய், ரத்தமும், சதையுமாக உயிருடன் வந்து நின்றதைக் கண்டு குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனே அவரின் தந்தை, லலிதா பாயை அழைத்துக் கொண்டு காந்தி சாகர் காவல் நிலையத்திற்குச் சென்றார். இறந்ததாக நினைத்த தனது மகள் உயிருடன் வந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவத்து அன்று ஷாருக் என்பவர் தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். பின்னர், மற்றொரு நபருக்குத் தன்னை 5 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த நபர், தன்னை ராஜஸ்தானின் உள்ள கோட்டா பகுதிக்கு அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னிடம் செல்போன் இல்லாததால் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என லலிதா பாய் கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னை அழைத்துச் சென்றவர்களுக்குத் தெரியாமல் தப்பியோடி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மஹிரா சர்மாவை டேட் செய்கிறேனா..? – சிராஜ் கொடுத்த பதில்
மேலும், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பரிசோதித்த போலீசார், அவர், இறந்ததாகக் கூறப்பட்ட லலிதா பாய் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, அவரைக் கொலை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் 4 பேரும் இன்னும் சிறையில்தான் உள்ளனர். இறந்ததாகக் கூறப்பட்ட லலிதா பாய் திரும்பி வந்ததால், தங்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த நான்கு பேரும் கோரியுள்ளனர். ஆனால், லலிதா பாயிடம் மருத்துவப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அறிவியல் பூர்வமாக உண்மை நிரூபிக்கப்பட்டால் மட்டுமே சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளனர்.
அதேவேளையில், உண்மையில் விபத்தில் உயிரிழந்தவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கை தற்போது போலீசார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.
March 22, 2025 4:31 PM IST
இறந்ததாக கூறி புதைக்கப்பட்ட பெண் 18 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பியதால் பரபரப்பு… அதிர்ச்சியில் உறவினர்கள்!

