பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
2003ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், குடியுரிமையை நிரூபிக்க 11 ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் கூறியது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 22 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாகவும், 36 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் மிந்தா தேவி எனும் பெண்ணுக்கு 124 வயது எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், இதனை கையில் எடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு, வாக்குகளை திருடியதாக பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான இந்திய செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், உச்சநீதிமன்றத்தில் இருவரை ஆஜர்படுத்தினார். மேலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக கூறி இருவரின் பெயர்களும் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் யோகேந்திர யாதவ், “தயவுகூர்ந்து இவர்களை பாருங்கள். இவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் எப்படி இங்கு வரமுடியும். உண்மையில், அவர்கள் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார்கள்” என நீதிபதிகள் முன் தெரிவித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி குறுக்கிட்டு, “இதை வைத்து டிராமா செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஜாய்மல்யா பாக்சி, “இது தற்செயலாக ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். சரிசெய்ய முடியும். அதேசமயம், உங்கள் கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “உலக வரலாற்றில் மிகப்பெரிய வாக்குரிமை பறிப்பை நாங்கள் காண்கிறோம். 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி நடந்ததில்லை. இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும். தேர்தல் ஆணையம், மாநிலம் முழுவதும் சென்று ஒருவரைக் கூட சேர்க்கவில்லை” என்று யோகேந்திர யாதவ் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை (13ஆம் தேதி) ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
August 12, 2025 10:16 PM IST
இறந்ததாக அறிவித்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம்… உச்சநீதிமன்றத்தில் ஆஜரான இருவர்!

