கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும். நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2016 செப்டம்பர் 29 அன்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “கீழடியில் உள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன. கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள்சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு-சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள்ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தை கொண்டதல்ல என்ற கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

