கோலாலம்பூர்:
நேற்று மாலை உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசா பகுதியில் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இரவு சந்தைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர், மர்ம நபரால் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
புக்கிட் செந்தோசா, ஜாலான் பகாவாலி (Jalan Bakawali) என்ற இடத்தில்
சிறுமி தனது உடன்பிறப்புகளுடன் நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு நபர் திடீரென அச்சிறுமியைத் தனது வீட்டிற்குள் இழுத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் வைத்து அந்த நபர் சிறுமியைத் தாக்கியதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தகவல் அறிந்த உலு சிலாங்கூர் போலீசார், உடனடியாகச் செயல்பட்டு 23 வயதுடைய வேலை இல்லாத இளைஞர் ஒருவரை அவரது வீட்டிலேயே கைது செய்தனர்.
சந்தேக நபருக்கு இதற்கு முன் குற்றப்பின்னணி ஏதும் இல்லை. ஆனால், அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல் (பிரிவு 324) மற்றும் 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (பிரிவு 14-அ) கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
சந்தேக நபரை இன்று முதல் திங்கட்கிழமை வரை நான்கு நாட்களுக்கு போலீஸ் தடுப்புக்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




