Last Updated:
இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இமரான்கான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள பாகிஸ்தான் சிறைத் துறை நிர்வாகம், அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு கடந்த சில வாரங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், சிறைக்குள் அவரை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், அக்கட்சி தொண்டர்கள் சிறை வளாகத்துக்கு முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இம்ரான் கான் எங்கே என்ற ’ஹேஷ் டேகுகள்’ எக்ஸ் தளத்தில் உலகளவில் டிரெண்டாகின.
இந்நிலையில், அடியாலா சிறையில் இம்ரான்கான் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைத்துறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இம்ரான் கான் வேறு சிறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இம்ரான் கானுக்கு ஐந்து நட்சத்திர விடுதியில் கூட கிடைக்காத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொலைக்காட்சி பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
November 28, 2025 6:45 AM IST


