(கோகி கருணாநிதி)
கெம்பாஸ்:
இம்பியான் எமாஸ் பகுதியில் அமைக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளிக்கான நிலத்தின் வர்த்தமான (கெசட்) நடவடிக்கை முழுமையாக நிறைவடையும் வரை அப்பகுதி இந்திய சமூகத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) உறுதியளித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கோரி, கெம்பாஸ் இந்திய நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் அச்சங்கத்தின் நிறுவனர் சுப்ரமணியம் இந்த விவகாரத்தை பி.எஸ்.எம். கட்சியிடம் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் அமீர் ஷபீக் அமீர் சோக்ரி, சமூகத்தினர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே தங்களது ஆதரவை வழங்க முடிவு செய்ததாக கூறினார்.
அவரது விளக்கத்தின்படி, ஜோகூர் மாநில அமைச்சரவை (எம்.எம்.கே.) கடந்த ஆண்டு இந்த நில ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியதுடன், அந்த நிலம் பள்ளி நிர்வாக வாரியத்திடம் (LPS) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது எஞ்சியிருப்பது நில அலுவலகத்தின் வர்த்தமான நடவடிக்கை மட்டுமே என்றார்.
அந்த வர்த்தமானப் பணிகள் நிறைவடைந்தவுடன், பள்ளி நிர்வாக வாரியம் கூட்டரசு அரசிடம் பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியையும், அதனைத் தொடர்ந்து தேவையான பிற ஒப்புதல்களையும் பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த வர்த்தமான நடவடிக்கை நிறைவடையும் வரை பி.எஸ்.எம். சமூகத்துடன் தொடர்ந்து இருக்கும். பள்ளி அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தடையின்றி முன்னேற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்,” என்று அவர் கெம்பாஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்த விவகாரம் நேற்று ஜோகூர் மந்திரி பெசாரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், நேற்று ஊடகங்களுக்கு அவர் வழங்கிய விளக்கத்தின் அடிப்படையில் வர்த்தமான நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்ற நம்பிக்கை சமூகத்தினரிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பள்ளியை உருவாக்கும் நோக்கில் நீண்டகாலமாக போராடி வரும் சமூகத்தினர், தொகுதியின் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து இன்னும் தீவிரமான ஒத்துழைப்பை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த சமூகத்தினர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே ஒப்புதல் பெற்ற செயல்முறைகள் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதே அவர்களின் ஒரே கோரிக்கை. யாரையும் குறை கூறுவதை விட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், குறிப்பாக அந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இந்த வர்த்தமான நடவடிக்கை விரைவில் நிறைவடைய உதவுவது மிகவும் முக்கியமானது. அது அப்பகுதி மாணவர்களின் கல்வி எதிர்காலத்திற்கு பெரும் பயனளிக்கும்,” என்றார்.
மேலும், வர்த்தமான நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்து, பள்ளிக் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அடுத்த கட்ட செயல்முறைகள் விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
அதேவேளை, இந்த விவகாரம் முழுமையாக நிறைவேறும் வரை பள்ளி நிர்வாகத்திற்கும், சமூகத்திற்கும் தேவையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் பி.எஸ்.எம். தொடர்ந்து வழங்கும் என்றும் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியின் பி.எஸ்.எம். வேட்பாளர் அமீர் ஷபீக் அமீர் சோக்ரி உறுதியளித்தார்.



