தேனி: திமுக – பாஜக கூட்டணி இடையே உக்கிரமான போட்டி நிலவும் தேனியில் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளுள் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அங்கே போட்டியிடுவது தான். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே தொகுதி தேனி. ஓபிஎஸ் மகன் ஓ.பி ரவீந்திரநாத் தேனி எம்.பி ஆனார். இந்நிலையில் அதிமுக பிளவுபட்டு, ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி போட்டுள்ளார். அமமுக டிடிவி தினகரனும் பாஜக அணியில் சேர்ந்துள்ளார். அதிமுகவுக்கு வலுவாக இருந்த தொகுதியான தேனியில் தற்போது டிடிவி தினகரன் – தங்க தமிழ்ச்செல்வன் இடையே கடும் மோதல் இருக்கிறது.
தேனியில் ஸ்டாலின்: இந்நிலையில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி சிபிஐஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, டிடிவி தினகரனை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
தேனியில் ஸ்டாலின் பேசுகையில், “கடந்த முறை தமிழ்நாட்டில் ஒரே ஒரு தொகுதி தவிர எல்லாவற்றிலும் வென்றோம். அந்த ஒரே ஒரு தொகுதியான இந்தத் தேனி தொகுதியில் இந்த முறை, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். உறுதி எடுத்துவிட்டீர்களா? தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளையும் வென்று, இந்தியா கூட்டணியின் ஒன்றிய அரசு மூலமாகத் தமிழ்நாட்டிற்கான எல்லாச் சிறப்புத் திட்டங்களையும் கொண்டு வருவோம். நாம்தான் எல்லாத் தொகுதியிலும் வெல்லப் போகிறோம்.
தினகரன் பாஜக அணியில் சேர்ந்தது இதனால் தான்: மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள். “மேட் இன் பி.ஜே.பி” வாசிங் மெஷின் அது! மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து வாஷிங் மெஷின் இது. அந்தக் கட்சியின் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.
1995-96-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 லட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா! ஏன் இவர் பா.ஜ.கவுக்குச் சென்றார் என்று!




