இப்போ தான் தங்கம் விலையே குறைய தொடங்கி இருக்கு.. அது பொறுக்கலயா..?
உலக அளவிலும் இந்தியாவிலும் ஜூன் மாதத்தில் இருந்து தங்கம் விலை கணிசமான அளவு சரிந்து வருகிறது. ஜூன் மாதம் கிட்டத்தட்ட 10 % வரை குறைந்த தங்கம் விலை ஜூலை மாதத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை குறைகிறதே என மக்கள் சந்தோஷப்படுவதற்குள் மத்திய வங்கிகள் தங்களுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டன.
தற்போது தங்கம் விலை குறைய தொடங்கி இருப்பதால் மீண்டும் பல நாடுகளின் வங்கிகளும் தங்கம் வாங்க முனைப்பு காட்ட தொடங்கியுள்ளன. உலக தங்க கவுன்சில் நடத்திய ஆய்வில் அடுத்த 1-2 ஆண்டுகளில் 30% மத்திய வங்கிகள் தங்கத்தின் ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக 51% மத்திய வங்கிகள், புவிசார் அரசியல் அபாயங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவே தங்கத்தை வாங்குவதாக தெரிவித்துள்ளன. இது 2024-ஆம் ஆண்டை விட 11% அதிகம்.

மத்திய வங்கிகள் தங்கம் வாங்கினால் சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் அதிகரிக்கும் மீண்டும் விலை கூடும். இப்போது தான் தங்கம் விலை சவரனுக்கு வரலாற்று உச்சத்தில் இருந்து 25,000 ரூபாய் வரை சரிந்திருக்கிறது. மத்திய வங்கிகள் போட்டி போட்டு தங்கம் வாங்கினால் மீண்டும் விலை ஏறும் இது சாமானிய மக்களுக்கு தான் சிக்கலை தரும்.
இந்தியாவை பொறுத்தவரை இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கக்கூடிய மொத்த தங்கத்தின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 158 பில்லியன் டாலர்கள் என இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கரன்சி இருப்பில் 17 % தங்கமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 சதவீதமாக தான் இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்ததற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை உயர்வு தான். 2024 ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2000 டாலராக இருந்து 2026 இல் 4000 டாலராக அதிகரித்துள்ளது. இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி வைத்து வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் ஏற்பட்டு ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யா தன்னுடைய பணத்தை பயன்படுத்த முடியாமலேயே போனது. எனவே இது போன்ற பொருளாதார சவால் ஏற்படும் போது தங்கம் தான் உதவியாக இருக்கும் என்பதற்காக பல்வேறு நாடுகளும் அதிக தங்கம் வாங்கி வைக்கின்றன.
போலந்து நாடு கொரோனா காலத்தில் 128 டன்கள் தங்கம் மட்டுமே வைத்திருந்தது அது தற்போது 353 டன்களாக உயர்ந்திருக்கிறது. செக் குடியரசு நாட்டின் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு மூன்றே ஆண்டுகளில் 13 டன்களில் இருந்து 76 டன்கள் என அதிகரித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டில் 557.8 டன்கள் தங்கம் வைத்திருந்தது, 2026இல் அது 880 டன்களாக இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு 58 % உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்பின் நடவடிக்கைகளை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது போர் தொடுப்பார் வணிக மோதலில் ஈடுபடுவார் என்பதெல்லாம் யாராலும் கணிக்க முடியாது என்பதால் பாதுகாப்புக்காக உலக நாடுகள் தங்கம் வாங்கி குவிக்கின்றன. சீனா, ரஷ்யா தொடங்கிய போக்கை சிறு நாடுகளும் பின்பற்றுகின்றன. ஏனெனில் எதிர்காலத்தில் எந்த நாட்டிடம் அதிக தங்கம் உள்ளதோ அவர்களின் கை தான் உலக பொருளாதாரத்திலும் அரசியலிலும் ஓங்கி இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

