Last Updated:
டெல்லி தெருக்களில் சேட்டையை அரங்கேற்றி வந்த இளைஞர் செய்த நூதன ரீல்ஸ் பின்னணி என்ன?.
ரீல்ஸ் எடுக்கிறேன் என்ற பெயரில் ஓடும் வாகனங்களின் கதவுகளை திறந்து விட்டு ஆபத்தான வகையில் செயல்பட்ட இளைஞரை டெல்லி போலீசார் தட்டித் தூக்கியுள்ளனர்.
ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் புரட்சியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் பலர் இருசக்கரவாகனத்தில் தெருத்தெருவாக வலம் வருவதைப் நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்விப் பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் வித்தியாசமாக யோசித்து இப்படி கூட ரீல்ஸ் எடுக்கலாமா? என இன்றைய இன்ஸ்டா இளம் தலைமுறைக்கு ஒரு முன் உதாரணமாக ஒரு ரீல்ஸ் முயற்சியை செய்து சிக்கலில் மாட்டியுள்ளார்.
ஏற்கெனவே நாட்டில் நிமிடத்திற்கு ஒரு விபத்து அரங்கேறி வருகிறது. பலர் எதிர்பாராத விதமாக உயிரிழப்புகளையும், உடல் பாதிப்புகளையும் அடைந்து தவித்து வருகின்றனர். விபத்துகள் நிகழாமல் தடுக்க அரசும் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தி, அதை பொதுமக்கள் கடைப்பிடிக்க வைக்க போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு தற்போது தான் தலைக்கவசத்தை போட்டுச் செல்லும் வேண்டும் என்கிற விழிப்புணர்வே ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு சாலைகளில் செய்யும் அட்டகாசம் எல்லை மீறிச் செல்கிறது. நான் ஒரு ரீல்ஸ் வீடியோ போட்டால் “யாருய்யா இவன் எனக்கே பாக்கணும போல இருக்கு” என நாலு பேர் சொல்ல வேண்டும். அப்படி நாலு பேரைக் கவர டெல்லியில் நாலாபுறமும் பைக்கில் சுற்றி வந்த நபர் தான் இந்த பைக் ஆசாமி. டெல்லி சாலைகளில் பைக்கில் வலம் வரும் இவர், சாலைகளில் ஓடும் வாகனங்களின் கதவை திடீரென திறந்து விட்டு சென்று விடுவார். பதறிப்போன ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி கதவை அடைத்துக் கொண்டு பின்னர் செல்வார்.
இதை ரீல்ஸ் எடுத்து போடுவதில் அந்த பைக் ஆசாமிக்கு ஒரு திருப்தி. ஊருக்குள் பேருந்து, ஆட்டோ, கார், வேன் என ஒன்றைக் கூட விட்டு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் பேருந்தின் முன்பு வேகமாக இருசக்கர வாகனத்தில் போய் பிரேக் பிடித்து நின்று ஓட்டுநரை வெறிக்க வெறிக்க பார்ப்பது இவரது ரீல்ஸ்களில் ஒன்று. இதில் ஏதோ ஒரு கெத்து அவருக்கு கிடைக்க தலைக்கேறிய ரீல்ஸ் வெறியில் வீடியோ எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாவில் லைக்ஸ்களை குவித்து வந்திருக்கிறார். அதிலும் புத்திசாலித்தனமாக தன்னை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக முகத்தை துனியால் மூடிக் கொண்டும், பைக்கில் நம்பர்பிளேட் இல்லாமலும் இந்த சேட்டையை அரங்கேற்றியிருக்கிறார்.
ரீல்ஸ் இளைஞரைப் பிடிக்க களத்தில் குதித்த போலீசார் ஒரு குழு அமைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். குறிப்பிட்ட சில சிசிடிவி காட்சிகள் மூலம் அவரது ஆடையாளம் தெரியவந்தது. வடகிழக்கு டெல்லியில் கஜூரி காஸில் வசிக்கும் துஷார் புனியா என்பவர் தான் அந்த ரீல்ஸ் எடுத்தவர் என்பதை கண்டு கொண்ட போலீசார் பைக்குடன் சேர்ந்து அவரையும் தூக்கினர். இதையடுத்து, இதற்கு முன்பு வேறு என்ன சேட்டைகளையெல்லாம் அரங்கேற்றியிருக்கிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


