
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, காலை வேளையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இவ்வாறான இயற்கை இடர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

