புதிய இணைப்பு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் நீதித்துறை அமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தச் சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இறுதி நாளான இன்று (25) மாலை குறித்த சட்டமூலங்களுக்கான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவினால் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சட்ட மூலங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்று (24) ஆரம்பமானது.
மேலும், இச்சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஐக்கிய மக்கள் சக்தியினரால் “ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம்” என்ற கருப்பொருளின் கீழ் பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அங்கு கறுப்புப் பட்டி அணிந்து போராட்டக்காரர்கள் பொல்துவ சந்தியில் திரண்டதுடன், இப்போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உட்பட பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
இன்றைய (25.09.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 07.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியும், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் மதிப்பீட்டின் ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

