மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு எதிராக நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் பிரிவு, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் மட்டும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டணியின்றி களம் கண்டுள்ளன. ஏழு கட்டங்களைக் கொண்ட மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையிலும், ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த 6 கட்ட தேர்தல் நிலவரங்களை ஆராய்வதற்காகவும் அடுத்தக்கட்ட நகர்வு தொடர்பாக விவாதிக்கவும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
இதையும் படிக்க:
நிறைவு பெறும் 21 நாள் ஜாமீன்… வீடியோவில் உருக்கமாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்!
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும், அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் கரத், டி.ராஜா மற்றும் தேஜஸ்வி யாதவ், உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினும் பங்கேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் டெல்லி செல்லவில்லை என்றும் அவருக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கடைசிக்கட்டத் தேர்தல் நடைபெறுவதால் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படாததை பாஜக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அதைப் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதனிடையே இன்று மாலை வெளியாகவுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பாக எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்படுள்ளது. இதைப் பற்றி விமர்சித்துள்ள பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்பது தெரியும் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)