Last Updated:
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி, 14 மசோதாக்கள், எஸ்.ஐ.ஆர்., டெல்லி குண்டு வெடிப்பு, நேஷனல் ஹெரால்டு விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்க திட்டம்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., டெல்லி குண்டு வெடிப்பு, புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல் என பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 19 ஆம் தேதி வரை 15 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இதில், எஸ்.ஐ.ஆர்., விவகாரம், டெல்லி குண்டு வெடிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன.
அதே சமயம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பதியப்பட்ட புதிய முதல் தகவல் அறிக்கை குறித்து ஆளுங்கட்சியும் எதிர்வாதம் வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, காப்பீடு சட்டத்திருத்தம் உட்பட 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்படுவதால், அதன் வரலாறு குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.
இதனிடையே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், கௌரவ் கோகோய், திமுக தரப்பில் டிஆர் பாலு, திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பித்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை குழு திமுகத் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர்.யை எதிர்த்துக் குரல் எழுப்புவோம் என்று கூறினார். மேலும் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத வரம்பை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவை குழு திமுகத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஆயிரத்து 290 கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
December 01, 2025 7:39 AM IST


