50,000 எரிவாயு சிலிண்டர்கள் இன்று (21) சந்தைக்கு விடுவிக்கப்படும் என வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்று (20) 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக 100,000 எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எரிவாயு பற்றாக்குறை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை நாட்டுக்கு வரவுள்ளது.
பெப்ரவரி 26 ஆம் திகதி 3,900 மெட்ரிக் தொன் கொண்ட மற்றொரு கப்பலும் அதைத் தொடர்ந்து பெப்ரவரி 28ஆம் திகதி மேலும் 3,700 மெட்ரிக் தொன்கள் கொண்ட கப்பல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தியுள்ளதால், அவர்களுக்கு எரிவாயுவை வழங்குவது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்பாகும்.
நெருக்கடியை உருவாக்க, நுகர்வோரை சுரண்ட அல்லது நியாயமற்ற வணிக ஆதாயங்களைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் தற்போது பற்றாக்குறையாக இருப்பதால், அவற்றை லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்ற முடியாததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் லிட்ரோ எரிவாயுவைப் பெறுவதற்கு ஏதுவாக மார்ச் 12 ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

