மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாசாஹிப் பகத். 10-ம் வகுப்பு முடித்த அவர், ஐ.டி.ஐ. படித்துள்ளார். பின்னர் புனே நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சம்பளம் குறைவாக இருந்ததால், இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ.9 ஆயிரம் கிடைக்கவே உதவியாளராக சேர்ந்தார். கணினிகளில் பணிபுரியும் ஊழியர்களை கவனித்த அவர், இது போன்ற வேலையில் சேர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். 10-ம் வகுப்பு மட்டுமே படித்ததை உணர்ந்த அவர்கள், இந்த வேலைக்கு பட்டப்படிப்பு தேவை என கூறியுள்ளனர். எனினும், கிராபிக் டிசைன், அனிமேஷன் பணிகளுக்கு பட்டப்படிப்பை விட திறமை இருந்தால் போதும் என கூறியுள்ளனர். இதையடுத்து கிராபிக் டிசைன் குறித்து ஓராண்டில் கற்றுக் கொண்டார்.
அதன் பிறகு கிராபிக் டிசைன் தொடர்பாக ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளார். வடிவமைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்காக டெம்ப்ளேட்களை வழங்கும் இணையதளத்தை தொடங்கினார். இவரது பணி நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதைப் பார்த்த பிரதமர் மோடியும் பாராட்டினார். மேலும் ‘போட்’ நிறுவன இணை நிறுவனர் அமன் குப்தா, பகத் நிறுவனத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளார். இன்று பகத்தின் நிறுவனம் ‘கன்வா’ உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உருவெடுத்துள்ளது.

