International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் மீண்டும் ஒரு மிக பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைப்பகுதியில் புதிதாக உருவான தடுப்பு அடுத்த 3 நாட்களுக்குள் உடைந்து வெள்ளம் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பனிப்பாறை சரிவு காரணமாக நேபாளத்தின் போதேகோசி ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. அதே நாளில் சீனாவின் ஜியிராங் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை துண்டித்தது.

நேபாளம்
இந்த வெள்ளத்துக்கு மழை காரணம் இல்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் லாங்டாங் லிருங் மலையின் வடக்குப் பகுதியில் இருந்த மிக பெரிய பனிப்பாறை துண்டு உடைந்து சுமார் 1,200 மீட்டர் கீழே உள்ள லெண்டே ஆற்றில் விழுந்ததை சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன..
பனியும் பாறைகளும் குறுகிய பள்ளத்தாக்கை அடைத்ததால் இயற்கையான தடுப்பு அணை போன்ற அமைப்பு உருவானது. பின்னர் அது உடைந்தபோது பனி, பாறைகள், சேறு மற்றும் தண்ணீர் கலந்த மிக பெரிய வெள்ளம் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்தது. இந்த வெள்ளம் ராசுவா, நுவாகோட், தாதிங், கோர்க்கா மற்றும் சித்வான் உள்ளிட்ட பகுதிகளை தாக்கியது.
மிக பெரிய நிலச்சரிவு
நேபாளத்தில் இது நடந்தபோது காலை சீனாவின் சிசாங் பகுதியில் உள்ள நேபாள எல்லையை ஒட்டிய ஜியிராங் துறைமுகம் அருகே மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் 5 அடிக்கும் அதிகமான ஆழத்தில் சேறு குவிந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சீனப் பகுதியில் இதுவரை 3 பேர் உயிரிழந்ததாகவும், 558 பேர் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நேபாள வெள்ளத்திற்கும் சீன நிலச்சரிவுக்கும் ஒரே விஷயம் தான் காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சீனா எச்சரிக்கை
இது எல்லாம் ஏற்கனவே நடந்து முடிந்தது. ஆனால், சீனாவின் நீர்வள அமைச்சகம் கூறிய மற்றொரு முக்கியமான விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் புதிய தடுப்பு ஒன்று உருவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அதில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியிருந்தது. ஏற்கனவே அதிலுள்ள ஏரி நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் இந்த ஏரிக்கு வரக்கூடும் என்பதால், தடுப்பு உடைந்து திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது. வெள்ளம் ஏற்பட்டால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை கணக்கிடும் பணியில் சீன பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேபாளமும் போதேகோசி, திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளின் கரையோரங்களில் வசிப்பவர்கள் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
என்ன நடந்தது
முதல் வெள்ள அலை புதன்கிழமை காலை 9 மணியளவில் நேபாளத்திற்குள் நுழைந்தது. பின்னர் சித்வானில் உள்ள தேவ்காட்டை மாலை நேரத்தில் சென்றடைந்தபோது, ஆற்றில் வினாடிக்கு சுமார் 5,850 கன மீட்டர் தண்ணீர் பாய்ந்தது. சுமார் 2 கோடி கன மீட்டர் கூடுதல் தண்ணீர் தேவ்காட் வழியாக சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெள்ள அலை சில மணி நேரங்களில் சுமார் 170 கி.மீ. தூரம் பயணித்தது. அவ்வளவு வேகமாக ஆற்றின் நீர் பாய்ந்து, பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.



