Last Updated:
தெலங்கானாவில் பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண் சிக்கியது எப்படி? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தெலங்கானா மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத கணவர் உடனடியாக செத்தால்தான், இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்கிற கவலையில், மனைவியே ஆட்களை ஏவி கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிவிட்டு நாடகமாடிய பெண் சிக்கியது எப்படி?
இப்படி ஒரு பாசக்கார மனைவிதான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த கணவரை, இன்சூரன்ஸ் பணத்திற்காக தீர்த்துக் கட்டி விட்டு ஒப்பாரி வைத்திருக்கிறார். கணவர் என்றால் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் செத்தாவது இன்சூரன்ஸ் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு எண்ணம்தான் இந்தப் பெண்ணுக்கு இருந்துள்ளது.
உடல்நிலை மோசமடைந்த கணவன் இன்றைக்கு சாவான், நாளைக்கு சாவான் என ஒரு வருடமாக காத்திருந்த மனைவி கடைசியில் பொறுமையிழந்து செய்த காரியம் தெலங்கானா மாநிலத்தையே திடுக்கிட வைத்துள்ளது. யார் அந்த பாசக்கார மனைவி? கட்டிய கணவனை கட்டம் கட்டி தூக்கியதன் பின்னணி என்ன?
தெலங்கானா மாநிலம் கம்மம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்தி. அவரது அப்பாவி கணவர்தான் ரவி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரவி ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அந்த வருமானமே பத்தாமல், குடும்பம் நடத்தி வந்தநிலையில், அவருக்கு உடல்நிலை வேறு பாதிக்கப்பட்டு விட்டது. இதனால், ரவி விரைவில் இறந்து விடுவார் என்று கருதிய பிரசாந்தி, உடனே கணவன் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்திருக்கிறார்.
ஆனால், ரவியோ இழுத்துக் கொண்டே இருந்தாரே தவிர, பிரசாந்தி எதிர்பார்த்ததுபோல் உடனடியாக சாகவில்லை. இதனால் பொறுமையிழந்த பிரசாந்தி, கணவனை கொலை செய்துவிட்டு, கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தை வைத்து சந்தோஷமாக வாழலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இதற்காக கணவன் ரவியை கொலை செய்ய அவருடைய உறவினரான சீனிவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராம்குமார், வெங்கடேஷ், ராம்பாபு ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். நான்கு பேரும் பிரசாந்தியின் கொலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தனர்.
அதன் அடிப்படையில் ரவியை சீனிவாஸ் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறி ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். உடல்நிலை மோசமாக இருந்தபோதும் கழுத்து வரை குடித்திருக்கிறார் ரவி. அதன்பின் அவரை அப்படியே சாலையில் இறக்கிவிட்டு, வீட்டுக்கு போகும்படி கூறியுள்ளனர்.
மதுபோதை உச்சந்தலைக்கு ஏற தண்ணீர்த் தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டியாக, ஒரு குத்தாட்டத்தை போட்டபடி சாலையில் தள்ளாடிக் கொண்டே சென்றிருக்கிறார் ரவி. அப்போது ராஜ்குமார் தன்னுடைய காரை எடுத்துவந்து ரவி மீது வேகமாக மோதியிருக்கிறார். இதனால் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த ரவி அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டார். விபத்துபோல் இருக்க வேண்டும் என்கிற அவர்களது திட்டம் நிறைவேறியதும் நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ரவியின் உடல் சாலையில் கிடப்பது பற்றிய தகவல் அறிந்த போலீஸார், விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு எதிர்பார்த்ததுபோல் விபத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த கொலை வழக்கில் பிரசாந்தி உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


