இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள், நிறுவனங்களுக்கு செக்: கமிஷனிலேயே கை வைக்கும் IRDAI..!!
இந்தியாவில் அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தொடங்கி பல்வேறு தனியார் நிறுவனங்களும் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகின்றன. வங்கிகள் கூட இணை நிறுவனங்கள் மூலம் இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு என பல வகைகள் உண்டு.
காப்பீடு திட்டங்களை வாடிக்கையாளர்களிடம் சேர்த்து அவர்களை அதில் இணைக்கும் நபர்கள் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் எனப்படுகின்றனர். வழக்கமாக இந்த இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு அவர்களின் விற்பனை செய்யும் காப்பீடு திட்டத்திற்கு ஏற்ப கமிஷன் வழங்கப்படும். இந்த கமிஷன் தொகைக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI கடிவாளம் போட தயாராகியுள்ளது. இது தொடர்பக புதிய வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

காப்பீட்டு துறையின் செலவினங்களை கட்டுப்படுத்தவும், பாலிசிதாரர்களுக்கு நியாயமான பலன்களை வழங்கவும், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்ட் எனப்படும் இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் மற்றும் ஊக்கத்தொகைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர இந்த வரைவு விதிகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முறையில் ஒரு பாலிசியை விற்பனை செய்தால், அதிகபட்ச கமிஷன் தொகையானது சராசரியாக 35% முதல் 51% வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனை குறைக்க ஐஆர்டிஏஐ திட்டமிட்டுள்ளது. இதன்படி, தனிநபர் டெர்ம் பாலிசிகளுக்கு (Individual Pure-Term Policies) முதல் ஆண்டு கமிஷன் தொகையானது வங்கிகள், தரகர்கள் மற்றும் இணைய aggregator போன்ற விநியோக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 25% ஆகவும், ஏஜெண்ட்களுக்கு அதிகபட்சமாக 30% ஆகவும் மட்டுமே இருக்க வேண்டும் என கூறியுள்ளது. இதன் பின்னர் வரும் புதுப்பிப்பு ஆண்டுகளுக்கு முறையே 7.5% மற்றும் 10% கமிஷன் வழங்கப்படும்.
அனைத்து திட்டங்களுக்கும் ஒரே மாதிரியான கமிஷன் முறை இருக்கக்கூடாது என்பதற்காக, பிரீமியம் செலுத்தப்படும் கால அளவை பொறுத்து கமிஷன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.5 ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தும் காலம் இருந்தால் விநியோக நிறுவனங்களுக்கு 5% மற்றும் முகவர்களுக்கு 6.25% வரை கமிஷன் வழங்கப்படும்.
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பிரீமியம் செலுத்தும் காலம் இருந்தால் விநியோக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 20% வரையிலும், முகவர்களுக்கு அதிகபட்சமாக 25% வரையிலும் கமிஷன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 10% வரை கமிஷன் தொகைகள் குறைய போகின்றன.
இதுவரை சில நிறுவனங்கள் நேரடி கமிஷன் தவிர்த்து, பல்வேறு சலுகைகள், பயணங்கள், மார்க்கெட்டிங் ஆதரவு மற்றும் பிராண்ட் கட்டணங்கள் போன்ற மறைமுகமான ஊக்கத்தொகைகளை வழங்கி வந்தன. புதிய விதிகளின்படி, இந்த அனைத்து வகையான பண மற்றும் பணமில்லா பலன்களும் சேர்த்து ஒரே கமிஷன் வரம்புக்குள் கொண்டுவரப்படும்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் வாங்கும் வாடிக்கையாளரிடம் காப்பீட்டை கட்டாயமாக இணைத்து விற்பனை செய்யும் முறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் பாலிசிகளை விற்கும் நடைமுறைகளை உடனே நிறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளது.
மேலும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வெப்சைட்டுகள், பாலிசி பற்றிய அடிப்படை விலை மற்றும் அம்சங்களை வாடிக்கையாளர் பார்ப்பதற்கு முன்பாகவே அவர்களின் தனிப்பட்ட விவரங்களை கட்டாயமாக உள்ளிடுமாறு நிர்பந்திக்கும் டார்க் பேட்டர்ன் முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிராமலேயே எளிதாக பாலிசி விவரங்களை ஒப்பீடு செய்து பார்க்க முடியும்.
இந்த முன்மொழிவுகள் அடங்கிய வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள தங்களது கருத்துக்களை அக்டோபர் 25 வரை தெரிவிக்கலாம். அதன் பின்னரே இறுதி விதிகள் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும். இந்த அதிரடி மாற்றங்களால் காப்பீட்டு விநியோக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் சந்தையில் சரிவை சந்தித்துள்ளன. இந்த வரைவு விதிகள் முழுக்க முழுக்க வாடிக்கையாளராகிய நம்மை பிரதானப்படுத்தியே கொண்டு வரப்படுவதாக ஐஆர்டிஏஐ அதிகாரிகள் கூறுகின்றனர்.

