
Last Updated:
வனத்துறையினர் அடங்கிய குழு ஒன்று இன்போசிஸ் வளாகத்திற்குள் முகாமிட்டு சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மைசூரில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளாகத்திற்குள் சிறுத்தைப் புலி ஒன்று புகுந்துள்ளது. இதைத் தொடர்ந்து பணியாளர்கள் இன்று வீட்டிலிருந்து பணியாற்றுமாறு (Work From Home) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் அமைக்கப்பட்டுள்ள இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகம் அருகே ரிசர்வ் வனப் பகுதி உள்ளது. இதனால் அங்கிருந்து சில விலங்குகள் அவ்வப்போது இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் புகுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சிறுத்தைப் புலி ஒன்று வளாகத்திற்குள் புகுந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுத்தைப் புலி தென்பட்ட இடத்தில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இருப்பினும் சிறுத்தைப் புலி உடனடியாக கண்டுபிடிக்கப்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று மட்டும் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு இன்போசிஸ் கேட்டுக் கொண்டுள்ளது. சிறுத்தைப் புலி கண்டுபிடிக்கப்படும் வரையில் வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் அடங்கிய குழு ஒன்று இன்போசிஸ் வளாகத்திற்குள் முகாமிட்டு சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக 2011 ஆம் ஆண்டின்போது சிறுத்தைப் புலி ஒன்று இதே வளாகத்திற்குள் நுழைந்தது. வனப்பகுதி அருகே அமைந்திருப்பதால் உணவுக்காக சிறுத்தைப்புலி இன்போசிஸ் வளாகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
December 31, 2024 3:28 PM IST
இன்ஃபோசிஸ் வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலி… பணியாளர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அறிவிப்பு

