இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் தான் வேலை இருக்கும்.. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்..!!
ஏஐ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி ஒவ்வொரு நாளை நம்மை திகைக்க வைக்கிறது. ஏற்கனவே டெக் நிறுவனங்களில் மனிதர்கள் வேலைகளை ஏஐ படிப்படியாக குறைத்து வருகிறது. இந்நிலையில் ஏஐ வருகையால் எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பேட்டி அளித்துள்ளார்.
ஏஐ வருகையால் எதிர்காலத்தில் மனிதர்களின் வேலை நேரம் பெருமளவில் குறையும் என ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார். இதன் காரணமாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற சூழல் உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார். இந்த தொழில்நுட்பப் புரட்சியால் வீட்டில் ஒருவர் சம்பாதித்தாலே போதும் என்ற நிலை கூட திரும்பும் என அவர் கணித்துள்ளார்.

ஏஐ மனிதர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் இதனால் உற்பத்தி திறன் பெருகும், எனவே மனிதர்கள் 6 , நாட்கள் 5 நாட்கள் வேலைகளை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பார்த்தால் போதும் என்ற நிலை உண்டாகும் என கூறியுள்ளார். தற்போது வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால்,ஏஐ வருகையால் பொருளாதார உற்பத்தி அதிகரிக்கும்போது, இரண்டு பேர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் என ஜெஃப் பெசோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குடும்பத்தில் யாருக்கேனும் விருப்பமிருந்தால் ஒருவர் மட்டும் வேலைக்கு செல்லலாம் அல்லது இருவரில் ஒருவர் வேலையை விட்டுவிலகும் சுதந்திரம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு புறம் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் போன்ற மற்ற தொழில்நுட்ப தலைவர்கள் ஏஐ-ஆல் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரித்து வரும் நிலையில், ஜெஃப் பெசோஸின் இந்த கருத்து முற்றிலும் மாறுபட்டதாகவும், நம்பிக்கையூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இருந்தாலும் வாரத்தில் 3 நாட்கள் வேலை செய்தால் போதும் என்ற நிலை உலகின் அனைத்து மக்களுக்கும் கிடைக்குமா என்பது தான் கேள்வி. குறிப்பிட்ட சில வேலைகளுக்கு தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும் சற்றே வசதி படைத்தவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே ஏஐ வருகையால் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். வருங்காலம் எப்படி இருக்கும் என்பதையே யாராலும் கணிக்க முடியவில்லை. அதே வேளையில் ஏஐ அமைப்புகள் மனிதர்களை விட திறன் மிக்கவையாக மாறுவது மனித இனத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என குரல்கள் எழுகின்றன. ஆனால் ஏஐ குறித்த பாசிடிவான பார்வையை ஜெஃப் பெசோஸ் ஏற்படுத்த முயற்சிக்கார். ஏஐ மனிதர்களின் வேலைச்சுமையை குறைத்து, குறைந்த நாட்களில் அதிக பலன்களைத் தரும் எதிர்காலத்தை உருவாக்கும் என தெரிவிக்கிறார்.

