இனி லட்சக்கணக்குல காசு கொடுத்து ஐபோன் வாங்க தேவையில்ல.. ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐடியா..!!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வைத்திருந்தாலே தனி கெத்து தான். ஆனால் அனைவராலும் அந்த போனை வாங்கிவிட முடியாது. குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது தேவை. உயர் ரக மாடல் போன் வாங்க 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலும் ஐபோன் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈஎம்ஐ தான் பெரும்பாலானவர்களை ஐபோன் உரிமையாளர்களாக மாற்றி இருக்கிறது. சிப்கள் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன்களின் விலையை உயர்த்த இருக்கிறது. விலை உயர்ந்தால் ஐபோன் விற்பனை மந்தமாகும் என்பதால் ஆப்பிள் நிறுவனம் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, லீஸுக்கு வழங்கும் புதிய முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஐபோனை வாங்குவதற்கு பெரிய தொகையை செலவிட தேவையில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்தினால் போதும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த ஐபோனை ஆப்பிள் நிறுவனத்திடமே திருப்பி தந்துவிட வேண்டும்.
இது சந்தா முறையை போலவே செயல்படும். வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டணம் செலுத்தி ஐபோனை பயன்படுத்தி கொள்ளலாம். புது மாடல் போன் வரும் போது தானாகவே சந்தாவை புது மாடல் போனுக்கு மாற்றி கொள்ளலாம். எனவே புதிய ஐபோன் மாடல்களை வாங்க முடியவில்லை என்றாலும் பயன்படுத்தலாம்.
ஐபோன்களின் விலை லட்சங்களை தாண்டிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரே அடியாக பெரிய தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதே போல ஈஎம்ஐ சுமையும் இல்லை. அதுமட்டுமில்லாமல் குறைந்த மாதாந்திர வாடகை மூலம் உயர்தர ஐபோன்களை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாடகை போன் தான் என்பதால் அதன் பராமரிப்பு மற்றும் மென்பொருள் அப்டேட்கள் நிறுவனத்தின் பொறுப்பிலேயே இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் நிம்மதியுடன் இருக்கலாம். வாடிக்கையாளரான நமக்கு அடிக்கடி புது புது அப்டேட் கொண்ட ஐபோன்களை பயன்படுத்தி கெத்து காட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
ஐபோன் விற்பனையை மட்டும் நம்பியிருக்காமல், தனது சேவைகள் பிரிவை வலுப்படுத்துவதே ஆப்பிளின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டம் மூலம் கூடுதலாக வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். மேலும் அவர்கள் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்துடனே இணைந்திருப்பார்கள். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை சுழற்சி முறையில் மீண்டும் பெற்று, அவற்றை புதுப்பித்து அல்லது உதிரிபாகங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது நிறுவனத்திற்கு நீண்ட கால அடிப்படையில் லாபகரமாக இருக்கும்.
முதலில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம் பின்னர் இந்தியாவுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடகை தொகையை பொறுத்து மக்களிடையே இந்த திட்டம் வரவேற்பை பெறுமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். இந்திய சந்தையில் குறைந்த வாடகை தொகையாக இருந்தால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும்.

