ஐசிஐசிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை (MAB) அதிகரிக்கும் முடிவுக்கு, கோடக்811 இணைத் தலைவர் மற்றும் உதய் கோடக்கின் மகனான ஜெய் கோடக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி சமீபத்தில் அறிவித்த படி, 2025 ஆகஸ்ட் 1 முதல் அல்லது அதற்கு பிறகு திறக்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை பெருநகர மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ.10,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். புறநகர் பகுதிகளில் உள்ள கிளைகளில் இது ரூ.5,000 இலிருந்து ரூ.25,000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் ரூ.5,000 இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோடக் மகேந்திராவின் ஜெய் கோடக் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ரூ.50,000 குறைந்தபட்ச இருப்புத் தொகை என்பது, இந்தியர்களின் மாதாந்திர வருமானத்தின் சுமார் 94% அளவைக் குறிக்கிறது. அதாவது, இத்தொகையை எப்போதும் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராதம்” என்று விமர்சித்தார்.
அவரது வாதத்திற்கு ஆதாரமாக, உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின் (2021) புள்ளிவிவரங்களையும் அவர் முன்வைத்தார்.
– இந்தியாவின் 90% மக்கள் மாதம் ரூ.25,000-க்கும் குறைவாக சம்பாதிக்கிறார்கள்.
– கீழ்மட்ட 50% மக்கள் மாதம் ரூ.9,500-க்கும் குறைவாகவே வருமானம் பெறுகிறார்கள்.
– மேல்மட்ட மக்களில் 5% மட்டுமே ரூ.64,380-க்கும் அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதேபோல், மேல்மட்ட மக்களில் 3% பேர் மட்டுமே மாதம் ரூ.1 லட்சத்தை தாண்டி சம்பாதிக்கிறார்கள்.
சேவையை பராமரிக்க கிளைச் செலவுகள் அதிகமாக இருக்கலாம் என்பதை அவர் ஒப்புக் கொண்டாலும், “டிஜிட்டல் முறைக்கே முன்னுரிமை” என்கிற அணுகுமுறையே அனைவரையும் உள்ளடக்கும் தீர்வாக இருக்க முடியும் என்று கூறினார்.
“வங்கிகள் அதைச் செய்யாவிட்டால், தொழில்நுட்ப நிதி நிறுவனங்கள் இதைச் செய்வார்கள். வங்கி என்பது அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான ஒன்று” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை (MAB) குறைபாடு – அபராதம்
புதிய விதிகளின் படி, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகைத் தேவையை பூர்த்தி செய்யத் தவறினால், பற்றாக்குறையின் 6% அல்லது ரூ.500 (எது குறைவோ அது) அபராதமாக வசூலிக்கப்படும். இந்த உயர்வு புதிய கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த மாற்றம், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கிக்கு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏற்கனவே அனைத்து குறைந்தபட்ச இருப்புக் கட்டணங்களையும் நீக்கியுள்ள நிலையில், மற்ற வங்கிகளும் அபராதக் கட்டமைப்புகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியையே தந்துள்ளது.
August 15, 2025 3:41 PM IST

