
ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானியத் தலைவர்களுக்கு இன்று (மார்ச் 27, 2026) ஒரு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் விரைவில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் மிகவும் தாமதமாகிவிடும்; அதன்பின் பின்வாங்குவதற்கு வழியே இருக்காது, அது உங்களுக்கு நன்றாக இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் ராணுவம் ஏற்கனவே ‘நிர்மூலமாக்கப்பட்டுவிட்டதாகவும்’, அவர்கள் மீண்டு வருவதற்கு ‘பூஜ்ய வாய்ப்புகளே’ உள்ளதாகவும் டிரம்ப் சாடியுள்ளார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ரகசியமாக ஒப்பந்தத்திற்காகக் கெஞ்சுவதாகவும், ஆனால் பகிரங்கமாகத் தங்களுக்குப் பேச்சுவார்த்தையில் உடன்பாடில்லை என்று நாடகமாடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தப் போர்ப் பதற்றங்களுக்கு இடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிெரசா தங்சிரி (Alireza Tangsiri) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், “ஹார்முஸ் நீரிணையை மூடியதற்கும், அங்கு நடந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கும் நேரடிப் பொறுப்பான தங்சிரி, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார். அவருடன் பல மூத்த கடற்படைத் தளபதிகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்சிரியின் மறைவு குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2018-ம் ஆண்டு முதல் IRGC கடற்படைத் தளபதியாகப் பணியாற்றி வந்த அலிெரசா தங்சிரி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பலமுறை ஆக்ரோஷமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தவர். கடந்த 2019-ம் ஆண்டிலேயே, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
சமீபத்தில் போர் தொடங்கிய பிறகு, “இரானுக்கு எதிராகப் போர் புரியும் நாடுகளின் கப்பல்களுக்கு இங்கு இடமில்லை” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார். ஈரானின் கடல்சார் பாதுகாப்பு உத்திகளில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு தளபதி கொல்லப்பட்டிருப்பது, உச்சபட்சத் தலைவர் காமேனி தலைமையிலான ஈரான் அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

