இனி பர்சனல் லோன் வேண்டாம்! கையில தங்கம் இருக்கும்போது லோன் எதுக்கு? எகிறும் தங்கக் கடன்!
இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை ஆபரணமாக அணிவதற்காக மட்டும் வாங்குவதில்லை. அவசரத் தேவைகளுக்கு அடகு வைத்து பணம் பெறலாம் என்ற நம்பிக்கையில் தான் வாங்குகின்றனர். காலம் காலமாக கையில் 1 கிராம் இருந்தால் அதை அவசர தேவைக்கு பயன்படுத்தி வரும் குடும்பங்கள் அதிகம். தற்போதும் பிணையம் இல்லாமல் பெறப்படும் வங்கி கடன்களுக்கு பதிலாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வணிகம் செய்பவர்கள் தங்க கடனை அதிகம் தேர்வு செய்வதாக தெரியவந்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் “மார்னிங் இந்தியா” என்ற அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் தங்க கடன் சந்தை கிட்டத்தட்ட 4 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி தங்கத்தை வைத்து மக்கள் பெற்ற கடன் தொகை ரூ.18.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

தனிநபர் கடனை பின்னுக்குத் தள்ளி சில்லறைக் கடன் பிரிவில் தங்கக் கடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் தங்கத்தின் விலை 60% வரை அதிகரித்தது தான். மறுபுறம் தனி நபர்கள் தொடர்ந்து பிசினஸ் செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்களுடைய பிசினஸ் தேவைக்கும் கடன் பெற தங்கத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டுகளில் இன்னும் இந்த துறை 28 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மார்ச் 2028-ஆம் ஆண்டுக்குள் ரூ.30 லட்சம் கோடியை தாண்டி மக்கள் தங்கக் கடன் பெறுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கக் கடனை விரும்பி தேர்வு செய்வதற்கான காரணம் என்ன?:
குறைந்த ஆவணத் தேவை: பிற கடன்களுக்கு நீங்கள் சில முக்கியமான ஆவணங்களை வழங்க வேண்டும். ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு உடனடியாக கடன் தேவைப்பட்டால் தங்கத்தை வைத்து எளிதில் கடன் பெறலாம். இதற்கு பெரிதாக ஆவணங்கள் ஒன்றும் கேட்கப்படுவதில்லை.
குறைந்த வட்டி: வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை விட தங்க கடன் மூலம் வசூலிக்கப்படும் வட்டி குறைவு. இதுவும் மக்கள் தங்கக் கடனை விரும்பி தேர்வு செய்வதற்கு காரணமாக அமைகிறது.
தற்போது தனிநபர் கடன்களைக் காட்டிலும் தங்க கடனை மக்கள் அதிகம் தேர்வு செய்து வருகின்றனர். ஆனால் தனிநபர் கடனுக்கு எந்த ஒரு பொருளையும் பிணையமாக கொடுக்க தேவையில்லை. இருந்தாலும் வட்டி குறைவு, நினைக்கும்போது திருப்பிக் கொள்ளலாம் என்ற வசதியின் அடிப்படையில் மக்கள் தங்கக் கடனை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இனி வரும் ஆண்டுகளில் இந்திய குடும்பங்கள் இன்னும் அதிகமான தங்க கடன் பெறும் வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது வரை இந்திய குடும்பங்களிடம் 28,000 டன்னுக்கும் அதிகமான தங்கம் இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு 380 முதல் 390 ட்ரில்லியன். இதில் வெறும் 8 சதவீதம் மட்டுமே இதுவரையில் தங்க கடனாக பெறப்பட்டுள்ளது.
இந்தியக் குடும்பங்களின் சேமிப்பில் 64 சதவீதம் நிலம், மியூச்சுவல் ஃபண்ட் தங்கம் போன்ற பிசிகல் அசெட் ஆகவே இருக்கிறது. இதனால் தங்கள் துறை மேலும் மேலும் வளர்ச்சியடையும் சாத்தியக்கூறுகளை தென்படுகின்றன. தங்க கடனை பொறுத்தவரையில் தென் மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன.
நாட்டின் பிற பகுதிகளிலும் தற்போது இதன் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் 78 சதவீதமும், மகாராஷ்டிரா 61 சதவீதமும், உத்தர பிரதேசம் 58 சதவீதமும் தங்க கடன் பெற்றுள்ளனர். இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. நீண்ட காலமாக சமூகத்தில் தங்கத்தை வைத்து கடன் பெறுவதில் பெரிய தயக்கம் இருந்து வந்தது. ஆனால் இப்போது மக்கள் வங்கி கடனை காட்டிலும் தங்க கடன் மேலானது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
