இது தொடர்பான அறிவிப்பு 20 மே 2026 அன்று, இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே பிரிகாபாலின் மருந்தின் தவறான பயன்பாடு குறித்து சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாள்பட்ட வலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஃபைப்ரோமியால்ஜிய, சில வகையான நரம்பியல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் இந்த மருந்து, அதன் மயக்கமூட்டும், விளைவுகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் சட்டவிரோதமாக கையிருப்பு வைக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட பிரிகாபாலின் மருந்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்த தகவல்களும் பதிவாகியுள்ளன.
இந்த அறிவிப்பின் மூலம், பிரிகாபாலின் மருந்து இனி 1945-ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் கீழ், தற்போதுள்ள அட்டவணை எச்-க்கு மாற்றாக, அட்டவணை எச்1, அதாவது, கடுமையான விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு அவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்.
இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள மருந்துகளின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, பயன்பாடு போன்ற நடவடிக்கைகளுக்கு முறையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவ ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை பயன்படுத்துவது ஆபத்தானது. பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், இந்த மருந்தை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க பரிந்துரைச் சீட்டுக்கு மட்டுமே பிரிகாபாலின் மருந்தை விற்பனை செய்ய முடியும். சில்லறை விற்பனையாளர்கள் பரிந்துரைச் சீட்டுகள் மற்றும் விற்பனை விவரங்களைப் பதிவுசெய்ய ஏதுவாக ஒரு தனிப் பதிவேட்டைப் பராமரிக்க வேண்டும்.
உற்பத்தியாளர்கள், பரிந்துரைக்கப்பட்ட “அட்டவணை எச்1 மருந்து எச்சரிக்கை” லேபிளை, பாக்கெட்டுகளில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அறிவிக்கையின் விதி முறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

