Last Updated:
நிதி அமைச்சர் யூனிஃபைடு லெண்டிங் இன்டர்ஃபேஸ் (ULI) என்ற புதிய டிஜிட்டல் கடன் வழங்கும் அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளார்.
பொதுவாக பர்சனல் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் வாங்குவதற்கு சிறந்த கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது அவசியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த தேவையை முற்றிலும் நீக்கும் விதமாக இந்திய அரசு ஒரு புதிய கடன் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதி அமைச்சர் யூனிஃபைடு லெண்டிங் இன்டர்ஃபேஸ் (ULI) என்று அழைக்கப்படும் ஒரு புதிய டிஜிட்டல் கடன் வழங்கும் அமைப்பை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சிஸ்டம் மூலமாக இதுவரை பர்சனல் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு வந்த வழிமுறைகளில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். வழக்கமாக செய்யப்படும் கிரெடிட் ஸ்கோர் சோதனைகள் இதன் மூலமாக நீக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பொருளாதார சேவைகள் துறை (DFS) இந்த திட்டத்தை வழிநடத்தி வருகிறது. தரவுகள், விதிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து கடன் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கி முற்றிலும் வெளிப்படையான ஒன்றாக மாற்றுவதோடு, அனைவருக்கும் கடன் கிடைப்பதை உறுதி செய்வது இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
பல்வேறு வகையிலான தரவுகளை பயன்படுத்த இருக்கும் ULI
CIBIL அல்லது Equifax போன்ற நிறுவனங்கள் வழங்கும் கிரெடிட் ஸ்கோர்களை நம்புவதற்கு பதிலாக ஒருவருக்கு லோன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு ULI வேறு சில தகவல்களை பயன்படுத்த உள்ளது. அதில் GST ரிட்டன்கள் மற்றும் கேஸ், தண்ணீர், மின்சாரம் போன்ற யுட்டிலிட்டி பில் பேமெண்ட்டுகள் போன்றவை அடங்கும். இதன் மூலமாக சிறு தொழில் செய்யும் நபர்கள், விவசாயிகள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் கூட எளிமையான முறையில் கடன்களை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கடன் முறையை விரைவாக அறிமுகம் செய்ய திட்டமிடும் அரசு:
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பிற அரசு துறைகள் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இந்த ULI அமைப்பை அமல்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு விரைவாக இந்த ULI சிஸ்டத்தை அவர்களால் அமல்படுத்த முடியும் என்பதை வழக்கமான முறையில் இந்த நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த சிஸ்டத்தை அமல்படுத்தாத நபர்கள் கூடிய விரைவில் அதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
ULI சிஸ்டத்தின் முக்கியமான அம்சங்கள்:
*பிரைவசிக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக உங்களுடைய ஒப்புதலின் பெயரில் மட்டுமே தகவல் பகிரப்படும்.
*அனைத்து கடன் வழங்குனர்களையும் சுமூகமான முறையில் இணைப்பதற்கு உதவும் எளிமையான தொழில்நுட்பம்.
*அனைத்து நபர்களின் கடன்களை சரி பார்ப்பதற்கு புதுமையான வழிகள் பயன்படுத்தப்படுவதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு லோன்கள் கிடைப்பது எளிமையாக்கப்பட உள்ளது.
*செலவுகளை குறைத்து, திறமையான முறையில் வேலை செய்வதற்கு கடன் வழங்குனர்களுக்கு உதவுகிறது.
July 30, 2025 1:53 PM IST