Last Updated:
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன் பெற விவசாயிகள் வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் இதர வணிக வங்கியில் முந்தைய ஆண்டுகளில் பயிர்க்கடன் பெற்று வட்டி மானியம் செலுத்தாமல் இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில், நடப்பாண்டில் அந்த விவசாயிகளுக்கு மட்டும் இதர வணிக வங்கிகளில் விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ளாரா என்பதை சிபில் அறிக்கையினை பெற்று உறுதி செய்த பின்னர் பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதர விவசாயிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படி சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று மட்டும் பெற்றுக்கொண்டு பயிர்க்கடன் மற்றும் கால்நடை மூலதன கடன்கள் வழங்கிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் அறிக்கை கேட்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமானது, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், தனியார் பால் நிறுவனம் மற்றும் கடன் பெறும் உறுப்பினர்களுடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்ட பின் கடன் வழங்கலாம் என்றும் கடன் மனுதாரர் மற்றும் சங்க செயலாளர் மட்டும் கால்நடைகளுடன் புகைப்படம் எடுத்து கால்நடைகளுக்கான கடன் மனுவுடன் இணைக்க வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
July 20, 2025 8:50 AM IST
இனி கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை: விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்