Last Updated:
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினால் கேப்டன்களுக்கு விதிக்கப்படும் தடையை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் வந்தாலே அது கிரிக்கெட் காலம் என்று கொண்டாடப்படும் வகையில் கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை (நாளை) தொடங்க இருக்கின்றன. இந்த சூழலில், ஐபிஎல் அணிகளில் விளையாடும் கேப்டன்களுடனான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக ஐபிஎல் போட்டிகளின் கடந்த சீசனில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் கேப்டன் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன. இது பற்றியும், கொரோனா காலத்தில் தடை விதிக்கப்பட்ட பந்துகளின் மீது உமிழ்நீர் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் சர்வதேச போட்டிகள் இல்லை என்பதால் உமிழ்நீரை பந்துகள் மீது பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
கடந்த சீசன் வரை பெரும்பாலான அம்சங்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பந்துகள் மீது உமிழ்நீர் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்திருப்பது, பந்துவீச்சாளர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதேபோல் பந்து வீச அணி வீரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அணி கேப்டன்களுக்கு தடை விதிக்கும் முறைக்கு மாற்றாக வீரர்களுக்கான நன்மதிப்பு புள்ளிகளைக் குறைக்கும் முறை நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அமலாக இருக்கிறது. தொடர்ந்து அதிக முறை புள்ளிகளை இழக்கும் அணி கேப்டன்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்கள் வரும்போது மட்டுமே தடை விதிக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
4 புள்ளிகளை இழக்கும் அணியின் கேப்டன்களுக்கு போட்டி ஊதியத்தில் 100 விழுக்காடு வரை அபராதமாக விதிக்கப் போட்டி நடுவர் இறுதி முடிவெடுப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி பெரும்பாலான ஐபிஎல் போட்டிகள் இரவு நேரத்தில் நடப்பதால் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும்போது, 11 ஆவது ஓவரில் பந்துகளை மாற்றவும் பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்சில் பந்து மாற்றும் விதி பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: எதிரியும் சந்திக்கக்கூடாத துயரம்.. 36 வருடங்கள் முன்பு.. கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குடும்பம் சந்தித்த சோகம்!
அளவுக்கு அதிக உயரம் எழும்பிய பந்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக சென்ற பந்தை நடுவர் ‘wide’ தராதபட்சத்தில், DRS கேட்கும் ‘ரிவியூ’ முறையும் நடப்பாண்டு தொடரும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
March 21, 2025 1:30 PM IST


