Last Updated:
நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவின் உண்மைத்தன்மையை அறியாமல் ஏமாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலின் மூலம் தயாரிக்கப்படாத செயற்கை பொருட்களை இனி பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யத் தடை விதிக்கும் புதிய வரைவுத் திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) வெளியிட்டுள்ளது.
உண்மையான பனீர் தூய்மையான பால் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால், அனலாக் பனீர் எனப்படும் செயற்கைப் பனீர், தாவர எண்ணெய்கள், சோள மாவு, ரசாயன சேர்க்கைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அனலாக் பனீரை, பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது என்று புதிய வரைவுத் திட்டத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே டெய்ரி அனலாக் பிரிவின் கீழ் பதிவு செய்துள்ள தயாரிப்புகளும் தங்களது லேபிள்கள், விளம்பரங்களில் பனீர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் தாங்கள் வாங்கும் உணவின் உண்மைத்தன்மையை அறியாமல் ஏமாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் இந்த வரைவுத் திட்டம் குறித்த தங்களது கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகளை 60 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் செயற்கைப் பனீர் பயன்படுத்தப்பட்டால், அதை மெனு கார்டு மற்றும் பில்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


