இந்த மாதம் 25ஆம் தேதியே சம்பளம்.. அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்.. அப்போ தனியார் ஊழியர்களுக்கு?
நாடு முழுவதும் வரும் திங்கள் அதாவது செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கி சேவைகள் தடைபட உள்ளது. குறிப்பாக மாத கடைசி அதுவும் சம்பளம் போடும் தேதியில் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. எனவே செப்டம்பர் மாத சம்பளம் உரிய தேதியில் கிடைக்குமா என அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 28 முதல் வங்கிகள் மூடப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை செப்டம்பர் 25ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமையே கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத்திய அரசு துறை ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ,அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், மத்திய அரசின் தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் செப்டம்பர் 25 அன்று சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வந்து சேர்ந்துவிடும். வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உரிய நேரத்தில் கிடைக்காமல் நின்று விட கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டினை மத்திய அரசு செய்துள்ளது.

மேலும் செப்டம்பர் மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள இதர பரிவர்த்தனைகள் மற்றும் அரசு சார்ந்த பணிகளும்தாமதத்தைத தவிர்க்கும் வகையில் இயன்றவரை முன்கூட்டியே முடிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர உத்தரவுகளை உடனடியாக தங்கள் அலுவலகங்களுக்கு கொண்டு சேர்க்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களை பொறுத்தவரை இந்த மாத சம்பளம் முன்கூட்டியே கைக்கு வர போகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு இப்படி எந்த ஒரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. எனவே அந்தந்த தனியார் நிறுவனங்கள் தான் சம்பளம் விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்.
முன்னதாக பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, வேலைநிறுத்தத்திற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாக இருந்தாலும் கூட அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் பிராந்திய கிராம வங்கிகளும் வழக்கம் போல் இயங்கும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அனைத்து வங்கி கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் இணைப்பு கிளைகள் செப்டம்பர் 27 அன்று முழுமையாக செயல்பட ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கி ஊழியர்களின் இந்த தொடர் வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களின் அவசர வங்கி தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏடிஎம்கள், யூபிஐ , மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துமாறும், அவசியமான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறும் பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
