Last Updated:
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டின் இந்த அறிவுரை, பொதுமக்களுக்கு மட்டுமன்றி மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்து விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும்.
எந்தவொரு மருந்து, மாத்திரைகளையும் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அப்படி உட்கொள்வது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிப்பதுண்டு. அந்த வகையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு எச்சரிக்கையை தற்போது தெரிவித்துள்ளது.
அதன்படி வலி நிவாரணிகள், குறிப்பாக NSAIDs (Non-Steroidal Anti-Inflammatory Drugs – ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்), மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி தேவையில்லாமல், அதிக அளவில் அல்லது நீண்ட காலம் பயன்படுத்துவதால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் என்று CDSCO எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை அல்லது சிறுநீரக செயலிழப்புக்கான ஆபத்து உள்ளவர்கள் இவ்வகை மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகள் எப்படி சிறுநீரகத்தை பாதிக்கின்றன? இவை பொதுவாக வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில சூழ்நிலைகளில் இவை சிறுநீரகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதித்து, சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்பாட்டை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவது, அதிக அளவில் எடுத்துக்கொள்வது, உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும் போது பயன்படுத்துவது, ஏற்கனவே சிறுநீரக நோய் இருப்பது, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இருப்பது, வேறு சில மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்துவது போன்ற சூழ்நிலைகளில் ஆபத்து அதிகரிக்கலாம். மருத்துவ பரிந்துரையின் போது அவர்கள் இதில் கூடுதல் கவனம் எடுப்பதால் எச்சரிக்கையோடு இருக்கலாம்.
The Central Drugs Standard Control Organisation (CDSCO) has issued an advisory circular addressed to healthcare professionals, pharmacies, retailers, distributors, and hospitals regarding the indiscriminate use of painkillers, specifically Non-Steroidal Anti-Inflammatory Drugs… pic.twitter.com/aXQIO1NTbW
— ANI (@ANI) September 22, 2026
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஏன் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்? இந்த மாத்திரைகள் பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள். சாதாரண வைரஸ் சளி, காய்ச்சல் போன்ற பெரும்பாலானவற்றுக்கு ஆன்டிபயாட்டிக் தேவையில்லை. அப்படியான நேரத்தில் தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வதால் இரண்டு முக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அவை, சிறுநீரக பாதிப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பிரச்சனை. எனவே, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை சுயமாகவோ, கடந்த முறை பயன்படுத்திய அதே ஆண்டிபயாடிக்கை மீண்டும் ஒருமுறை தானாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டின் இந்த அறிவுரை, பொதுமக்களுக்கு மட்டும் விடுக்கப்பட்ட அறிவுரை அல்ல. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருந்து விநியோகஸ்தர்களுக்கும் பொருந்தும்.


