Last Updated:
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 74 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா இலங்கைக்கு எதிரான மேட்சில் 61 ரன்கள் எடுத்தார்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இவற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம், ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகருடன் ஒருமுறை மோதும். இந்த சுற்றின் போது இந்திய அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து முதல் அணியாக வெளியேறி இருந்தது.
இறுதிப்போட்டியில் விளையாட பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே வாய்ப்பு காணப்பட்ட நிலையில் அந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது.இந்த தொடரில் மூன்றாவது முறையாக இரு அணிகளும் நாளை இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30 ரன்களும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 31 ரன்களும், ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 ரன்களும் எடுத்தார்.
அதைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 74 ரன்களும், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 75 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா இலங்கைக்கு எதிரான மேட்சில் 61 ரன்கள் எடுத்தார். அவர் தொடர் நாயகன் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ள சூழலில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை 2 ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டால் இந்திய அணி தடுமாறும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப்அக்தர் அவரது விக்கெட்டை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் அணி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அபிஷேக் சர்மாவுக்கு எல்லா பந்துகளும் சரியாக பேட்டில் மாட்டி விடாது, நிச்சயமாக ஏதாவது தவறு செய்வார் என்று பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அவர் உற்சாகம் அளித்துள்ளார் அக்தரின் இந்த ஆலோசனை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை கேலி கிண்டலும் செய்து வருகின்றனர்.
September 27, 2025 3:33 PM IST


