கோல தெரெங்கானு,
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, மலேசியா முழுவதும் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு எச்சரிக்கையான எண்ணிக்கை. அதிலும் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பெண்கள்.
அவர்கள் மீது நடக்கும் வன்முறைகள், பல நேரங்களில் உடல் ரீதியாக அல்ல, மனஅழுத்தம் ஊட்டும் விதமாகவும் இருக்கிறது என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad தெரிவித்துள்ளார்.
திரெங்கானு மாநிலத்தில் மட்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்த 130 வழக்குகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும், எண்ணிக்கை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.
கோல தெரெங்கானுவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் .” சில பெண்கள் தாம் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதையே உணர முடியாமல் இருக்கிறார்கள். இந்த வன்முறைகள் சில சமயங்களில் ‘ரிவர்ஸ் சைக்காலஜி’ (Reverse psychology) முறையில் ஏற்படுத்தப்படுகிறது. அதிலும் பெரும்பாலான வன்முறைகள் அதிக நெருக்கமான உறவுகளிடம் இருந்துதான் நிகழ்கின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மை. இந்தச் சூழ்நிலையை மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்றார் அவர்.
மேலும் பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட “Aku Wanita @ KRT” திட்டம் சமூகத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், ‘K-Chat’ என்ற குழு ஆலோசனை அமர்வுகள் மூலம் வன்முறையிலிருந்து மீண்ட பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் அதிகரிக்கும் உளவியல் ஆதரவும் வழங்கப்படுகிறது. அவர்களது மீட்பு அனுபவங்கள், மற்ற பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றார் அவர்.




