Last Updated:
இந்தோனேஷியாவில் அமைக்கப்படவுள்ள இந்த வளாகம், ஐஐஎம்-ன் முதலாவது சர்வதேச வளாகமாகும்
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் தமது வளாகத்தை இந்தோனேஷியாவில் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இந்த வளாகத்தால் ஒட்டுமொத்த ஆசிய பிராந்தியத்தில் உள்ள இளையோர் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார்.
இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர், அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடனான கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை அறிவித்தார். இந்த வளாகம் இந்தோனேஷியாவின் மலாங்கில் உள்ள ஷிங்கசாரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையும். இது இந்திய உயர்கல்விச் சூழலை சர்வதேச மயமாக்கலையொட்டிய சிறப்பு நடவடிக்கையாகும்.
இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்தில் மற்றுமொரு சிறப்பு மைல்கல்லாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. துபாயில் அகமதாபாத் ஐஐஎம், அபுதாபியில் தில்லி ஐஐடி, சான்சிபாரில் சென்னை ஐஐடி ஆகியவற்றின் வளாகங்கள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் உலகளாவிய திறனை மேம்படுத்த உறுதிபூண்டுள்ள நம்பத்தகுந்த உலகாளவிய அறிவுசார் கூட்டாளியாக வளர்ந்து வரும் இந்தியாவின் சூழலை இது சுட்டிக்காட்டுகிறது.
இந்தோனேஷியாவில் அமைக்கப்படவுள்ள இந்த வளாகம், ஐஐஎம்-ன் முதலாவது சர்வதேச வளாகமாகும். இது இந்தியா – இந்தோனேஷியா இடையேயான வளர்ந்து வரும் கூட்டாண்மையையும் உயர்தரமான கல்வியை உலக அளவில் அளிக்கும் நிலைக்கு இந்தியா உருவாகி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.


