Last Updated:
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கொலை செய்துவிட்டு மும்பையில் மறைந்து கொண்ட காதலனை, போலீசார் கட்டம் கட்டி தூக்கியது எப்படி?
வாட்ஸ்அப்பில் வேறு யாருடனோ காதலி பேசிக் கொண்டிருக்கிறார் என்கிற சந்தேகத்தில் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் போலீசாரிடம் சிக்கியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கொலை செய்துவிட்டு மும்பையில் மறைந்து கொண்ட காதலனை, போலீசார் கட்டம் கட்டி தூக்கியது எப்படி?
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்தவர் அந்த 24 வயது பெண். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், பியூஷ் வீட்டிற்கு வெளியில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.
அதில் பியூஷ் உள்ளே செல்லும்போது தனது காதலியுடன் செல்வதும், வெளியே வரும்போது ஒரு பையை எடுத்துக்கொண்டு தனியாக வருவதும் பதிவாகி இருந்தது. கொலை நடந்தது முதல் பியூஷ் தலைமறைவாகி இருந்தார். அவரது செல்போன் நம்பரை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தூர் தனிப்படை போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். மும்பை போலீசார் உதவியுடன் பன்வெல் பகுதியில் பதுங்கியிருந்த பியூஷை கைது செய்தனர்.
பில்லி சூனியம் வைக்கும் பகுதியில் பியூஷ் சுற்றி வந்தது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது. விசாரணையில், அவர் பில்லி சூனியம் வைப்பவர்கள் துணையோடு தனது காதலியின் ஆவியிடம் பேச முயற்சி செய்ததாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். காதலியின் ஆவியோடு பேசி, செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்க முயற்சித்ததாக போலீசிடம் கூறியிருக்கிறார்.
விசாரணையில் கொலைக்கான திடுக்கிடும் காரணம் தெரியவந்தது. பியூஷின் காதலி வாட்ஸ்அப் மூலம் வேறு ஒருவருடன் போனில் பேசுவதாக பியூஷ் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பியூஷ் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், அப்பெண் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது.
காதலியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர், ‘ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன்’ என்று கூறி அப்பெண்ணின் கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டுள்ளார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டபோது அப்பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். அதன் பின்னர், அவரை மூச்சுவிட முடியாமல் அழுத்திப் பிடித்து இறுதி மூச்சை நிறுத்தினார். அதன் பின்னரும் கோபம் தனியாத பியூஷ் கத்தியை எடுத்து அவரது நெஞ்சிலேயே மாறி மாறி குத்தி இருக்கிறார்.
காதலி மீதான சந்தேகத்தால், காதலனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


