Last Updated:
ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்?” என தெரிவித்தார்.
“நாம் அனைவரும் இந்தியர்கள், அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்?” என ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு பயணம் நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். 100 ஆண்டு பயணம் நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; “மனிதர்களின் கைகளில் தொழில்நுட்பம் இருக்க வேண்டும். மாறாக தொழில்நுட்பத்தின் கையில் மனிதர்கள் இருக்கக் கூடாது. இதற்கு கல்வி முக்கியமானது. தொழில்நுட்பம் படிக்காதவர்களின் கைகளில் சென்றால், அது எதிர் விளைவை ஏற்படுத்தும். கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல. கல்வி ஒருவரை மனிதராக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வியையே நாம் எதிர்பார்க்கிறோம்.
நாம் அடிமைகளாக இருந்தபோது, நமது பழைய கல்வி முறை மறைந்து, புதிய கல்வி முறை வந்தது. அதனை அவர்களுக்கு ஏற்ப உருவாக்கினர். ஆனால் நாம் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை இவற்றை எல்லாம் உள்ளடக்கி இருக்க வேண்டும்.
இந்தியப் பிரிவினையை ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கவில்லை என்று சொல்வது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது ஆர்.எஸ்.எஸ் போதுமான வலிமையுடன் இல்லை. மக்கள் தொகை போதுமானதாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்க, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளைப் பெறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் அனைவரும் இந்தியர்கள், அனைவரும் சமம் என்றால் ஏன் இந்து – முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்? சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் சூட்டப்படக்கூடாது. நான் முஸ்லிம்களின் பெயர்கள் சூட்டப்படக்கூடாது என்று சொல்லவில்லை.
மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது. நாம் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன, வரையறுக்கப்பட்ட வளங்கள் உள்ளன. நமது நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது முக்கியம். எனவே, ஊடுருவல் நிறுத்தப்பட வேண்டும். இதைத் தடுக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என பேசியுள்ளார்.
August 28, 2025 7:24 PM IST


