Last Updated:
அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டங்கள் ஒரே விவகாரம் என்பதால் உச்சநீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரிக்கிறது
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோயில்களை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கை மீண்டும் உச்சநீதிமன்றமே விசாரணை செய்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 3 மாநிலங்களில் உள்ள சட்டங்கள் ஏறக்குறைய ஒரே விவகாரத்தை கையாளுவதால் உச்சநீதிமன்றமே வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினாலும், மனுதாரர்களுடைய கோரிக்கை ஒரே மாதிரியாக இருப்பதன் காரணமாகவும் உச்சநீதிமன்றமே வழக்கை மீண்டும் விசாரித்து உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது.
அதற்கு ஏதுவாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்த ரிட் மனுவை மீண்டும் பட்டியலிட்டு விசாரிக்க உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அப்போது குறிப்பிட்ட வழக்கறிஞர் சாய் தீபக் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களில் பல பிரிவுகளை தனித்தனியாக எதிர்ப்பதாகவும் அது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனைவியும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து வழக்கை ஜூலை மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


