Last Updated:
மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் எதிரும் புதிருமாக இருக்கும் இரு துருவங்கள் கைகோர்க்க தயார் என அறிவித்துள்ளன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் நலனுக்காக ராஜ் தாக்கரேவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
தற்போது இரு மொழிகளை மட்டும் கற்பிக்கும் பள்ளிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக மகாராஷ்டிராவில் உள்ள 80% ஆசிரியர்களுக்கு புதிய கற்பித்தல் முறை குறித்தும் டிஜிட்டல் தளங்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட உள்ளது.
மேலும் புதிய கல்விக் கொள்கை வரும் 2025 – 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், 2028 – 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனாத் தலைவர் ராஜ் தாக்கரேவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்தி திணிப்புக்கு எதிராக தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளை மறந்து மகாராஷ்டிராவின் நலன்களுக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் ஒருங்கிணைந்து செயல்படப்போவதாக ராஜ் தாக்கரே அறிவித்தார்.
இதையும் படிக்க: டெல்லியில் குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு
இதனை வரவேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தனக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையிலான சிறு சிறு பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மகாராஷ்ட்ரா மாநில நலன்களுக்காக கை கோர்த்து போராடத் தயார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இருவரும் இணைவது மகிழ்ச்சி தான் எனத் தெரிவித்தார்.
April 20, 2025 7:56 AM IST


