Last Updated:
நரேந்திர மோடி 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்து, இந்திரா காந்தியை பின்னுக்குத் தள்ளி, இந்திய வரலாற்றில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
தொடர்ச்சியாக அதிக காலம் இந்திய பிரதமராக பதவி வகித்த பட்டியலில் பிரதமர் மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று, வெள்ளிக்கிழமையுடன் 4,078 நாட்களை நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, மறைந்த இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார்.
இதனால் தொடர்ச்சியாக பிரதமர் பதவியை அலங்கரித்தவர் பட்டியலில் 2 ஆவது இடத்தில் இந்திரா காந்தி இருந்து வந்தார். தற்போது, அந்த சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். இருப்பினும் இந்திரா காந்தி மொத்தமாக, 5,828 நாட்கள் பிரதமராக இருந்துள்ளார்.
இந்திய வரலாற்றில், தொடர்ச்சியாக 6,130 நாட்கள் பிரதமராக பதவி வகித்து, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதலிடத்தில் தற்போதும் உள்ளார். அவருக்கு பிறகு, அந்த பட்டியலில் 2 ஆவது இடத்தை பிரதமர் மோடி பிடித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு, காங்கிரஸ் அல்லாத அரசில் அதிக காலம் பதவி வகித்தவராக பிரதமர் மோடி உள்ளார். இரண்டு முறை தனது பதவிக்காலங்களை நிறைவு செய்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், காங்கிரஸ் அல்லாத தலைவரும் இவரே ஆவார்.
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் மோடி பதவி வகித்துவருவது ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
July 25, 2025 3:29 PM IST