புதுடெல்லி: இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது. இதன்மூலம், இனி உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அணிகளைத் தேர்வு செய்யவும் முடியும்.
15 வயதுக்கு (யு-15) மற்றும் 20 வயதுக்கு (யு-20) உட்பட்டோர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை அவசரமாக அறிவித்தது தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துத் துறை அமைச்சகம் கடந்த 2023, டிச.24-ம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று ரத்து செய்துள்ளது.
முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பதவிகளுக்கு கடந்த 2023, டிச.21-ம் தேதி நடந்த தேர்தலில், முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்-ன் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தலைமையிலான குழு வெற்றி பெற்றிருந்தது. என்றாலும் பிரிஜ் பூஷணின் கோட்டையான கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் தேசிய போட்டிகளை நடத்துவதற்கான இடத்தினைத் தேர்வு செய்ததை மத்திய அரசு விரும்பில்லை. இதனைத் தொடர்ந்து இடை நீக்க உத்தரவு பாய்ந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே இடைநீக்க ரத்து குறித்த உத்தரவில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நடவடிக்கையே எடுத்துள்ளது. அதனால், இடை நீக்கத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.” என்று விளையாட்டுத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.