வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் மார்ச் முதல் வாரத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறைந்தது, அமெரிக்காவின் வர்த்தக போர், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிந்து வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் உள்ள முதலீட்டை அதிக அளவில் திரும்பப் பெற்று வருவதே சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மார்ச் முதல் வாரத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.24,753 கோடி (நிகரமாக) மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.34,574 கோடி, ஜனவரியில் ரூ.78,027 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற நிகர முதலீடு ரூ.1.37 லட்சம் கோடி ஆகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தொகையைவிட பங்குகளை விற்பனை செய்யும் தொகை தொடர்ந்து 13 வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் ரூ.1.49 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு வெறும் ரூ.427 கோடியாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் ரூ.1.71 லட்சம் கோடியாக இருந்தது. அதேநேரம், கடந்த 2022-ல் அவர்கள் திரும்பப் பெற்ற தொகை ரூ.1.21 லட்சம் கோடியாக இருந்தது.