கோலாலம்பூர்:
மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா (Mitra) அறிமுகப்படுத்திய ‘உயர்வு மடானி மானியத் திட்டத்திற்கு’ (Uyarvu Madani Grant Programme) விண்ணப்பங்கள் தொடங்கப்பட்ட 5 நாட்களிலேயே 1,340 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கான 1,500 விண்ணப்பங்களை மித்ரா மிக நெருங்கியுள்ளது. கடந்த ஜூன் 29 அன்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு, தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் இந்திய சமூக தொழில்முனைவோர் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாக மித்ரா தலைமை இயக்குனர் என். ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ இறுதி நாள் ஜூலை 13 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அதற்கு முன்பாகவே எட்டப்பட்டால், விண்ணப்ப விநியோகம் முன்கூட்டியே நிறுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வந்துள்ள விண்ணப்பங்களில் இருந்து தகுதிவாய்ந்த, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் 700 இந்திய தொழில்முனைவோர் இந்த மானியத்தைப் பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும், தகுதியான வணிகப் பிரிவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் வரை மானியம் வழங்கப்படும். என்றும் அவர் மேலும் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, மித்ரா அமைப்பிற்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் மித்ராவின் ஆண்டு நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
மடானி அரசின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வரும் மித்ரா அமைப்பு, கல்வி, தொழிற்கல்வி (TVET), சமூக-பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் நலன்புரி திட்டங்களை முறையாக இந்திய சமூகத்திற்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
21 முதல் 55 வயதிற்குட்பட்ட மலேசிய இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM) முறையான வணிகப் பதிவைச் செய்திருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் மித்ராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



