Last Updated:
அடுத்த தலைமுறை நகருக்கான, அடுத்த தலைமுறை போக்குவரத்து என்ற தலைப்பில் பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் காரணமாகவே, ஆபரேஷன் சிந்துர் வெற்றி சாத்தியமானதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அடுத்த தலைமுறை நகருக்கான, அடுத்த தலைமுறை போக்குவரத்து என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயசார்பு அடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்த நிலையில், தற்போது 1,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு 24 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
பெங்களூருவில் புதிதாக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் சித்தராமையாவுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார். ஒரு நாள் பயணமாக பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.வி.சாலை முதல் பொம்மசந்த்ரா வரை 19 கிலோமீட்டர் தூர மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆர்.வி. சாலை முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அவருடன் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் பயணம் மேற்கொண்டனர்.
August 10, 2025 9:00 PM IST


